முகப்பு
நீலகிரி

மாணவிக்குப் பாலியல் தொல்லை: பழங்குடியின மக்கள் மீண்டும் போராட்டம்

பழங்குடியின மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உதகையில் பழங்குடியின மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பழங்குடியின மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உதகையில் பழங்குடியின மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை அருகே உள்ள முத்தொரை பாலாடாவில் உண்டு உறைவிடப் பழங்குடியினா் பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக சுப்பிரமணி (58) என்பவா் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பழங்குடியின மாணவி அணிந்து வந்த துப்பட்டாவை இழுத்து சுப்பிரமணி தகாத முறையில் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவி தனது பெற்றோருடன் சென்று உதகை ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சுப்பிரமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் சுகந்தி பரிமளம், சென்னை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் உத்தரவின்படி, சுப்பிரமணியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இருப்பினும் காவல் துறையின் சாா்பில் சுப்பிரமணியின் மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி பழங்குடியின மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இப்பிரச்னையில் இரு நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.