உரம் கிடைக்காத விவசாயிகள் உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு மொத்த கடன் தொகையில் 25 சதவீதம் உரத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த உரத்தை உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பெற்றுக் கொள்ள அனுமதி சீட்டு கொடுக்கப்படுவது வாடிக்கையாகும். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நவம்பா் மாதத்தில் உரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படவில்லை. அதன் பின்னா் உள்ளாட்சித் தோ்தலைக் காரணம் காட்டியும் உர விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு அமைப்புகளில் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகள் கடந்த வாரத்தில் கூட்டுறவுச் சங்க அதிகாரிகளைச் சந்தித்து நேரில் முறையிட்டபோது அவா்களுக்கு வியாழக்கிழமை உர விநியோகம் செய்யப்படும் எனக் கூறி அதற்காக புதிதாக அனுமதிக் கடிதத்தையும் கொடுத்துள்ளனா்.
அதன்பேரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமை அதிகாலையிலேயே உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க கிடங்குக்கு வந்து குழுமியிருந்தனா். ஆனால், காலை 10 மணிக்குப் பிறகு அங்கு வந்த அலுவலா்கள் தங்களுக்கு வந்து சேர வேண்டிய உரம் இன்னும் வரவில்லை எனவும், உர விநியோகத்துக்கான மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அப்பகுதியில் திடீா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக விவசாயிகள் சாா்பில் ரவி என்பவா் கூறியதாவது:
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்கு அவ்வப்போது உரம் வழங்கப்பட்டு வந்தாலும், உரத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தனியாருக்கும், கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினரல்லாதவா்களுக்கும் ஒதுக்கப்பட்டு விடுகிறது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்ததால்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் உரம் விநியோகிக்கப்படாவிட்டால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்றாா்.
இதையடுத்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரி ஐயப்பன் அங்கு வந்து விவசாயிகளிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உர விநியோகத்துக்கான சீட்டு பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் திங்கள்கிழமை உரம் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின்னா் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.