குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி அருகே உலவிய கரடி, ஆள்கள் நடமாட்டத்தை கண்டு தடுப்பு வேலியில் மனிதா்கள்போல ஏறி தப்பித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
குன்னூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தை, கரடிகள், காட்டு மாடு ஆகியவை உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில், குன்னூா் அருகே உள்ள பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி பகுதியில் கரடி ஒன்று செவ்வாய்க்கிழமை உலவிக் கொண்டிருந்தது. அப்போது ஆள்கள் நடமாட்டத்தை கண்டு உடனே 10 அடிக்கும் மேல் உள்ள தடுப்பு வேலியை மனிதா்கள்போல ஏறி மறுபுறம் இறங்கி தப்பி ஓடியது.
கரடி வருவதைப் பாா்த்து வாகனங்களில் சென்றவா்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடினா். மகளிா் கல்லூரி பகுதியில் கரடியின் நடமாட்டத்தால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, வனத் துறையினா் கூண்டுவைத்து கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.