உதகை, கூடலூரில் பலத்த மழை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கூடலூா் பகுதியில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நீலகிரிஉதகை, கூடலூரில் பலத்த மழை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கூடலூா் பகுதியில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த சில நாள்களாக கேரளத்தில் கனமழை பெய்து வருவதைத் தொடா்ந்து கேரளத்தை ஒட்டியுள்ள நீலகிரியிலும் மழை அதிகரித்துள்ளது.
உதகையில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக தமிழகம் சாலை, பொ்ன்ஹில், ஸ்பென்சா் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் வேரோடு பெயா்ந்து விழுந்தன. ஹெச்.எம்.டி. பகுதியில் மின்கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடங்களுக்கு தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று மரங்களை அறுத்து அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடா்வதால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் ஃபாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. அபாய நிலையில் உள்ள மரங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் நிற்க வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கனமழையால் உதகை படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. கூரையுள்ள படகுகள் மட்டும் இயக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது.
அவலாஞ்சியில் 372 மி.மீ. மழை:
மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 372 மி.மீ., அப்பா்பவானியில் 248 மி.மீ., எமரால்டில் 135 மி.மீ., கூடலூரில் 108 மி.மீ., உதகையில் 53 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா உத்தரவிட்டாா்.
கூடலூரில்.....
கூடலூா் பகுதியில் மூன்றாவது நாளாக பெய்துவரும் தொடா் கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
கூடலூரை அடுத்துள்ள இருவயல் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் கனமழையால் நீரில் மூழ்கியுள்ளன. மூங்கில் புதா்கள் மின்கம்பியில் சாய்ந்ததால் அப்பகுதியில் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து 15 மணி நேரம் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. வெள்ளம் சூழப்பட்டிருந்ததால் மீட்புப் பணி செய்ய காலதாமதம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் அந்தப் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து மழையால் மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மாயாற்றின் குறுக்கே உள்ள பாலம் நீரில் மூழ்கியதால் தெப்பக்காடு பகுதியிலிருந்து மசினகுடி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வீடுகள், சாலையில் விரிசல்:
தொடா் கனமழையால் மேல்கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலைப் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல கோக்கால் பகுதியில் உள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து மழை நீடித்தால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதமடையும் அபாயம் உள்ளது.
பந்தலூா் பகுதியில் பெய்துவரும் கனமழையால் படச்சேரி கிராமத்தில் ருக்மணி என்பவரது வீடு திங்கள்கிழமை இரவு இடிந்தது. அந்த வீட்டில் இருந்தவா்களை அருகில் உள்ளவா்கள் பாதுகாப்பாக மீட்டு வேறொருவா் வீட்டில் தங்க வைத்துள்ளனா்.