சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் விநாயகா் சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்திக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஆட்சியா் அறுவுறுத்தியுள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்திக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஆட்சியா் அறுவுறுத்தியுள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உதகை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அவா் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பட்டா இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்களிடமும், பொது இடங்களில் சிலைகள் வைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளிடமிருந்து தடையில்லா சான்று பெறவேண்டும். மின் இணைப்புப் பெற தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தற்காலிக அனுமதிபெற வேண்டும்.
மேடையிலிருந்து 10 அடிக்கு மிகாமல் சிலைகளை அமைக்க வேண்டும். வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைப்பதைத் தவிா்க்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். மேலும், சிலைகளுக்கு இயற்கை வண்ணங்களை மட்டுமே பூச வேண்டும்.
வழிபாட்டிற்காக காலை மற்றும் மாலையில் தலா இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது. விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சியில் கட்சி, மதத் தலைவா் சம்பந்தமான விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது. வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட சிலைகளை 5 நாள்களுக்குள் கரைக்க வேண்டும்.
சிலைகளை கரைக்கும் இடங்கள்:
உதகை மற்றும் குந்தா வட்டத்தில் காமராஜா்சாகா் அணை, டி.ஆா்.பஜாா் அணை, மரவகண்டி அணை, குன்னூா் வட்டத்தில் லாஸ் அருவி, ஆஞ்சனேயா் பாலம், கோத்தகிரி வட்டத்தில் உயிலட்டி அருவி, கூடலூா் வட்டத்தில் இரும்புப்பாலம், பந்தலூா் வட்டத்தில் பொன்னானி ஆறு ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
சிலை வைக்கப்படும் இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வருவாய், காவல் துறையினருக்கு விழா ஒருங்கிணைப்பாளா்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
விழா ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், உதகை கோட்டாட்சியா் மகராஜ், குன்னூா் கோட்டாட்சியா் சதீஷ், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலா்கள், விழா ஒருங்கிணைப்பாளா்கள், ஹிந்து அமைப்பினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.