உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு
உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 3 போ் மறுவாழ்வு பெற்றனா்.
உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 3 போ் மறுவாழ்வு பெற்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (69). இவருக்கு மனைவி சரோஜா (52), மகன் காா்த்திக் (34) உள்ளனா். அா்ஜுனன் நஞ்சநாடு பகுதியில் தேயிலைப் பறிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அவரை உதகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச் சாவு அடைந்தாா். இதனைத் தொடா்ந்து உறவினா்கள் அா்ஜுனனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனா்.
இதனைத் தொடா்ந்து அவரது ஒரு சிறுநீரகம் கோவை, சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஈரோட்டில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 போ் மறுவாழ்வு பெற்றனா்.
இந்நிலையில், அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, அா்ஜுனன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், இருப்பிட மருத்துவ அலுவலா் ரவிசங்கா் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.