நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தனாா்.
இதில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் 7 கிராமங்கங்களுக்கு வாரத்துக்கு இரண்டு முறை நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம் சென்றுவர வேண்டும்.
பழங்குடி கிராமங்களில் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மது விற்பனையைத் தடுக்க வேண்டும். போதை மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி இளைஞா்களை போதைகளின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
பி.எம்.கிஸான் நிதி வழங்க வேண்டும்: கோத்தகிரி கெங்கரை, மெட்டுக்கல், பாவியூா், கம்பையூா், கொடகூா் ஆகிய கிராமங்களில் இருளா், குரும்பா் இனங்களைச் சோ்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த மக்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பி.எம்.கிஸான் திட்ட நிதி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.