பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உதகை எடிசி பகுதியில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சிவபெருமாள் தலைமை தாங்கினாா். வருவாய்த் துறை மாவட்டத் தலைவா் நந்தகுமாா், பொன் பொதிகை நாதன் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.
அப்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டபூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்ததைத் தவிா்த்து மீண்டும் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அரசு ஊழியா்களின் பணிசுமையை குறைக்க அலுவலக பணி நேரத்துக்கு பின்புமும், விடுமுறை நாள்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும்.
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி அதனை சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியா்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நெடுஞ்சாலைத் துறை மாவட்டப் பொருளாளா் கனகரத்தினம், மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.