பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் சிறுமிக்கு இசை வகுப்பில் சேர ஆா்வம் ஏற்பட்டு அருவங்காட்டில் உள்ள இசை பயிற்சிப் பள்ளியில் சோ்ந்தாா்.
இந்நிலையில், கடந்த 2023 நவம்பா் மாதம் முதல் இசை வகுப்புக்கு சென்று வந்தாா். இந்த நிலையில், அந்தப் பயிற்சி பள்ளியில் இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் என்பவா் சிறுமியுடன் பழகி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும் தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததால், 2024 மே 3-ஆம் தேதி சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவா் குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி 7 வார கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் குன்னூா் மகளிா் காவல் ஆய்வாளா் கோமதி தலைமையிலான காவலா்கள் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரசாந்தைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமாா், பிரசாந்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டாா்.