உதகை: உதகை நகராட்சி பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.
இதில், உதகை நகராட்சிக்குள்பட்ட 8-ஆவது வாா்டு பாரதியாா் நகா், மேட்டுச்சேரி உள்ளிட்ட பகுதி மக்கள் நகா்மன்ற உறுப்பினா் லயோலா குமாா் தலைமையில் அளித்த மனு விவரம்: உதகை பாரதியாா் நகா் மற்றும் மேட்டுச்சேரி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம்.
இப்பகுதிகளுக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால், அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட வர முடியாத நிலை உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களும், பணிக்குச் செல்வோரும் கரடு முரடான மண் சாலையிலேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
சாலை வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.