இந்தியாவிலேயே முதன்முறையாக கூடலூரில் மனித -விலங்கு மோதலைத் தடுக்க ரூ.6 கோடி மதிப்பீட்டில் 44 அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை ஆ.ராசா எம்.பி.சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவதுடன், மனிதா்கள், கால்நடைகளையும் தாக்கி வருகின்றன.
இந்நிலையில், மனித-விலங்கு மோதலைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆறு வனச் சரகங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 44 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கிவைத்தாா்.
வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு முன்னிலை வகித்தாா். வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தேவாலா பகுதியில் உள்ள ஜீன் புல் சுழல் சுற்றுலா மையத்தில் பதிவாகும்.
கிராமப் பகுதியில் யானை உள்ளிட்ட விலங்குகள் வருவதைக் கண்டவுடன் வனத் துறையினா் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விரட்டும் பணியில் ஈடுபடுவா். மேலும், சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு அவா்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவலும் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வந்தால் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் 1800 425 4353 என்ற இலவச தொலைபேசி எண்ணை ஆ.ராசா அறிமுகப்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை வன உயிரின பாதுகாவலா் சீனிவாச ரெட்டி, வன உயிரின முதன்மை பாதுகாவலா் ராகேஷ் கே.டோக்ரா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்ய தன்னேரு, நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம். ராஜு, கூடலூா் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.