நீலகிரி மாவட்டம், மஞ்சூா் - கெத்தை மலைச் சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
கேரள வனப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் மஞ்சூா்- கெத்தை சாலையில் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மஞ்சூரிலிருந்து கெத்தை நோக்கி சென்ற ஒரு காரை செவ்வாய்க்கிழமை துரத்தியது.
இதைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை பின்னோக்கி இயக்கி தப்பினா். சாலையின் நடுவே நின்ற காட்டு யானை, சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.
மஞ்சூா் - கெத்தை பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினா் அங்கு கண்காணிப்புப் பணியை த் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.