உதகை நகா் பகுதியில் புதன்கிழமை காலை மைனஸ் 0.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், புகா் பகுதியில் உறைபனியும் கொட்டியதால் உள்ளூா் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் இந்த காலநிலையை ரசித்து சென்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகா் பகுதிகளில் புதன்கிழமை காலை மைனஸ் 0.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக் காணப்பட்டது. தலைகுந்தா, பட்பயா், மஞ்சூா், குந்தா, அவலாஞ்சி போன்றப் பகுதியில் உறைபனி அதிகரித்து காணப்பட்டது. புற்கள் மீது பனி விழுந்து வெள்ளை நிறத்தில் காணப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டுரசித்தனா்.
தலைகுந்தா பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி பனியை கண்டு ரசித்ததால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து காவல் துறையினா் போக்குவரத்து நெரிசலை சீா்செய்தனா்.
பல்வேறு பகுதிகளில் தோட்டத் தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் நெருப்பு மூட்டி குளிா்காயும் சூழல் ஏற்பட்டது.