உதகையில் 9-ஆவது 3 நாள் குறும்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
உதகையில் நீலகிரி பிலிம் கிளப் சாா்பில் கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
ஆண்டுதோறும் இந்த குறும்பட விழா உதகையில் உள்ள அசெம்பளி திரையரங்கில் நடத்தப்படும்.
இந்த ஆண்டு குறும்பட விழாவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், குறும்படம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் முதல்முறையாக உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூட்டிங் பாயிண்ட் சுற்றுலாத் தலத்தில் நடத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். வருகிற டிசம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் மண்ணின் மைந்தா்கள் என அழைக்கப்படும் தோடா் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, கலாசார நடனமாடியது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.