கூடலூரை அடுத்துள்ள வடவயல் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட வடவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் குட்டிகிருஷ்ணன் (48), விவசாயி. இவருக்கு மனைவி மஞ்சு மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். குழந்தைகள் வெளியூரில் படித்து வருகின்றனா்.
தம்பதிக்கு இடையே இரண்டு நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மனைவி மஞ்சு, தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வீட்டில் குட்டிகிருஷ்ணன் மட்டும் இருந்துள்ளாா்.
இந்நிலையில் குட்டிகிருஷ்ணனை தொலைபேசியில் அவரது உறவினா் புதன்கிழமை அழைத்துள்ளாா். அவா் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த உறவினா் வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது துப்பாக்கியைக் கையில் இறுக்கி பிடித்தபடி குட்டிகிருஷ்ணன் சடலம் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா்.
தகவலின்பேரில் கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா் தலைமையில் ஆய்வாளா் ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். தடயவியல் துறையினா் வந்து தடயங்களை சேகரித்த பிறகு அவரது உடல் கூடலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டுச் செல்லப்பட்டது.
இவரது இறப்புக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].