கூடலூா்: கூடலூா் அருகே முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் பெண் யானை இறந்துகிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், காா்குடி வனச் சரகத்துக்குள்பட்ட கிராஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் வன ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுமாா் 32 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துகிடப்பதைக் கண்டு உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா்.
தன்னாா்வலா்கள் முன்னிலையில் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அதே இடத்தில் பெண் யானையின் சடலம் புதைக்கப்பட்டது.
யானை உயிரிழப்புக்கான காரணம் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.