குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஒடிஸா முதல் மன்னாா் வளைகுடா வரை தெலங்கானா, ராயல்சீமா, உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத் தொடந்து, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதில் குன்னூா்- உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். இதன் காரணமாக குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.