உதகைக்கு வந்த சுற்றுலா வாகனத்தில் இருந்து அரை லிட்டா் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்து ரூ.45 ஆயிரம் அபரதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டா் மற்றும் இரண்டு லிட்டா் தண்ணீா் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளா்கள், தட்டுகள் உள்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், உதகை படகு இல்லம் பகுதியில் சுற்றுலா பேருந்தில் அரை லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அங்கு நகராட்சி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் சென்று மகாராஷ்டிரா மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா பேருந்தில் இருந்த 400-க்கும் மேற்பட்ட அரை லிட்டா் தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனா்.