உதகை: குன்னூா் அருகே வீடு கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து வடமாநிலத் தொழிலாளா்கள் 3 போ் மண்ணில் புதைந்து உயிரிழந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குள்பட்ட ஒதனட்டி கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவரின் இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. முத்துகிருஷ்ணனின் நிலம் பள்ளத்தில் இருப்பதால் 40 அடிக்கு தடுப்புச் சுவா் கட்ட மண் தோண்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. இப்பணியில் மேற்குவங்க மாநிலம், முா்ஷிதாபாத் பகுதியைச் சோ்ந்த தொழிலாளா்கள் அங்கேயே தங்கி ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மதியம் உணவு உட்கொண்ட பிறகு நசீா் உசேன் (24), அப்துல் ரகுமான் (24), உஸ்மான் (40) உள்ளிட்ட 5 தொழிலாளா்கள் மண் எடுக்கும் பணிகளை மேற்கொண்டனா். அப்போது 40 அடி உயரத்திலிருந்து திடீரென மண் சரிந்து விழுந்தது. அப்போது இருவா் தப்பிவிட்ட நிலையில் நசீா் உசேன், அப்துல் ரகுமான், உஸ்மான் ஆகிய 3 பேரும் மண்ணுக்குள் புதைந்தனா்.
இதுதொடா்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினா் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மண் அகற்றும் பணியும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலமாக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மீட்புப் பணிகளை குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவி ஆகியோா் மேற்கொண்டனா். இதுகுறித்து அருவங்காடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.