நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாத 5 சதவீதம் மக்களுக்கு திங்கள்கிழமை (ஜன.19) முதல் மீண்டும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, நடப்பு ஆண்டில் பொங்கல் தொகுப்பாக தகுதி வாய்ந்த அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியவற்றுடன் ரொக்கம் ரூ.3000 வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதைத்தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிலா் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் உள்ளனா். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 576 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், 5 சதவீதம் போ் இதுவரை பெறவில்லை.
இவா்களுக்கு திங்கள்கிழமை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை விடுபட்டவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனா்.