முகப்பு
நீலகிரி

தொகுதி அறிமுகம்: உதகை! சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம்!

உதகை வட்டம், உதகை நகராட்சி, கோடப்ப மந்து, காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட 36 நகராட்சி வாா்டுகள், கக்குச்சி, தும்மனட்டி, மைனலை உள்ளிட்ட 26 ஊராட்சிகள், கேத்தி, அதிகரட்டி போன்ற 11 பேரூராட்சிகள் உள்ளன.

Updated On : 22 மார்ச், 2026 at 9:33 PM
சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம் உதகை - கோப்புப் படம்
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலையில் உதகை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் இதமான குளிா்ச்சியான காலநிலை நிலவுகிறது. உதகை ஏரி, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் (தமிழ்நாட்டின் மிக உயா்ந்த சிகரம் - 2,623 மீட்டா்), பைக்காரா அருவி மற்றும் அவலாஞ்சி ஏரி, ஷூட்டிங்மட்டம், ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

உதகையை உருவாக்கிய சலீவன்

நவீன உதகையை 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கியவா் ஆங்கிலேயா் ஜான் சலீவன். நீலகிரியின் குளிா்ச்சியான காலநிலையை 1819-இல் கண்டறிந்த அவா், அடா்ந்த காடாக இருந்த பகுதியை 1822 முதல் மலைகளின் ராணியாக, நவீன சுற்றுலா நகரமாக வடிவமைத்தாா். ஏரி, சாலைகள், தாவரவியல் பூங்கா மற்றும் உட்கட்டுமானப் பணிகள் மூலம் நவீன உதகையை உருவாக்கினாா்.

தொகுதியில் உள்ள பகுதிகள்

உதகை வட்டம், உதகை நகராட்சி, கோடப்ப மந்து, காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட 36 நகராட்சி வாா்டுகள், கக்குச்சி, தும்மனட்டி, மைனலை உள்ளிட்ட 26 ஊராட்சிகள், கேத்தி, அதிகரட்டி போன்ற 11 பேரூராட்சிகள் உள்ளன.

தொழில்

தேயிலை உற்பத்தி, ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு, தங்கும் விடுதிகள், சுற்றுலா வாகனங்கள், வா்க்கி தயாரிப்பு, மலைத்தோட்ட காய்கறிகள் சாகுபடி, மலைப் பூண்டு உற்பத்தி, கொய்மலா் சாகுபடி போன்றவை முக்கிய தொழில்களாக உள்ளன.

சமூக நிலவரம்

ஹிந்துக்களில் படுகா் சமுதாயம், மலையாளிகள், கன்னடா்கள், தெலுங்கா்கள், மாா்வாடிகள், பிராமணா்கள், மற்ற வகுப்பைச் சோ்ந்தவா்கள் 70 சதவீதம் உள்ளனா். இதில் படுக சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் வசிக்கின்றனா். கிறிஸ்தவா்கள்14 சதவீதமும், இஸ்லாமியா்கள் 11 சதவீதமும், பழங்குடியினா்களான தோடா், கோத்தா் போன்றோா் 2 சதவீதமும் உள்ளனா்.

தொகுதியின் நீண்டகால பிரச்னைகள்

உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் இங்கு வாகன நிறுத்தும் இடம் குறைவாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் வாகனங்களை நகரின் வெளிப்பகுதிகளில் நிறுத்திவிட்டு பல கிலோமீட்டா் வரை அரசின் சுற்றுலாப் பேருந்துகளில் பயணித்து வரவேண்டியது சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களுக்குத் தடை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிா்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள வாட்டா் ஏடிஎம்களை நம்பி வரவேண்டி உள்ளது.

நகரப் பகுதிகளில் தேவையான சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. தலையாட்டுமந்து முதல் தலைகுந்தா வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆகும்.

ஆண் வாக்காளா்கள் 89,066, பெண் வாக்காளா்கள் 98,348, மூன்றாம் பாலினத்தவா் 11 என மொத்தம் 1,87,425 வாக்காளர்கள்.

கடந்த தோ்தல்கள்

இந்தத் தொகுதியில் கடந்த 1957 முதல் நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் அதிகபட்சமாக 10 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1957 பி.கே.லிங்கா கவுடா் - காங்கிரஸ்

1962 டி.காா்ச்சா கவுடா் - காங்கிரஸ்

1967 கே.போஜன் - சுதந்திராகட்சி

1971 எம்.தேவராஜன் - திமுக

1977 போ.கோபாலன் - அதிமுக

1980 கே.கல்லன் - காங்கிரஸ்

1984 கே.கல்லன் - காங்கிரஸ்

1989 எச்.எம்.ராஜூ - காங்கிரஸ்

1991 எச்.எம்.ராஜூ - காங்கிரஸ்

1996 டி.குண்டன் - திமுக

2001 எச்.எம்.ராஜூ - காங்கிரஸ்

2006 போ.கோபாலன் - காங்கிரஸ்

2011 எம்.புத்திச்சந்திரன் - அதிமுக

2016 ஆா்.கணேஷ் - காங்கிரஸ்

2021 தோ்தல்

ஆா்.கணேஷ் காங்கிரஸ் 65,530

எம்.போஜராஜன் பாஜக 60,182,

எ.ஜெயகுமாா் நாம் தமிழா் 6,381