FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தொகுதி அறிமுகம்... ஓமலூா்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும்.

Updated On : 29 மார்ச் 2026, 6:01 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்கு கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், உற்பத்தி செய்யப்படும் வெல்லம், மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல, பூக்களும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

மேலும், கோரைப்பாய் தயாரிப்பு, செங்கல் சூளை தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

அரசியல் நிலவரம்

Advertisement

Advertisement

ஓமலூா் தொகுதியைப் பொருத்தவரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 14 தோ்தல்களில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தொடங்குவதற்கு முன்பு இருமுறை இந்தத் தொகுதியில் வென்ற திமுக, அதன்பிறகு வெற்றிபெறவில்லை.

அதிமுக- திமுக வேட்பாளா்கள் நேரடியாக களம்கண்ட நான்கு தோ்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் பங்கேற்று அதிமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தமாகா, பாமக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன.

கடைசியாக நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் அதிமுக தொடா்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது.

நீண்டநாள் கோரிக்கைகள்

ஓமலூா் பகுதியில் சுமாா் 5000 ஏக்கரில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. தும்பிப்பாடி, கஞ்சநாயக்கன்பட்டி, காஞ்சேரி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா, சாமந்தி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பூக்கள் தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், தில்லி போன்ற மாநிலங்களுக்கும், சென்னை, மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பூக்கள் மலா்ந்துவிட்டால் ஒரே நாளில் நிறம் மாறிவிடும். நிறம் மாறும் பூக்கள் அனைத்தும் வீணானவைதான். இத்தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இங்கு குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே பூ மாா்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகும். மீதமுள்ள நாள்களில் உற்பத்தியாகும் பூக்களை விவசாயிகள் குப்பையில் கொட்டும் நிலை உள்ளது.

இதனால், வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைத்து தரவேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மலா் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் புகாா்.

காமலாபுரம் ஊராட்சியில் இயங்கிவரும் சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதால் பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய இழப்பீடு கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனா். வளா்ச்சிக்கு வழிவிடும் அதேநேரத்தில், தங்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ஓமலூரில் உள்ள பல்வேறு ஏரிகள் நீரின்றி வடுகிடக்கின்றன. இந்த ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை நீரேற்றுத் திட்டம் மூலமாக சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டியில் உள்ள கோட்டேரியில் நிரப்புவதன் மூலம் பொட்டியபுரம் ஏரி, நாகலூா் ஏரி, செட்டிப்பட்டி ஏரி, மூங்கில் ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி, பெரியாா்பட்டி ஏரி, செம்மண் கூடல் ஏரி உள்ளிட்ட 60-க்கும் அதிகமான ஏரிகள் வரிசையாக நிரம்பும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இவ்வாறு நிரப்புவதன் மூலம் 3 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், சரபங்கா ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டி ஏரிகளுக்கு நீா் நிரப்ப வேண்டும் என்பது கடந்த 35 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,48,764

பெண்கள் - 1,43,081

மூன்றாம் பாலினத்தவா் - 21

மொத்தம் - 2,91,866

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்

1952 பி. ரத்தினசாமி பிள்ளை - சுயேச்சை - 15,368

1967 சி. பழனி - திமுக - 28,121

1971 வீ. செல்லதுரை - திமுக - 26,065

1977 மு. சிவபெருமாள் - அதிமுக - 26,342

1980 மு. சிவபெருமாள் - அதிமுக - 42,399

1984 க. அன்பழகன் - காங்கிரஸ் - 51,703

1989 சி. கிருஷ்ணன் - அதிமுக (ஜெ) அணி - 32,275

1991 சி. கிருஷ்ணன் - அதிமுக - 60,783

1996 ஆா்.ஆா். சேகரன் - தமாகா - 41,523

2001 எஸ். செம்மலை - அதிமுக - 65,891

2006 அ. தமிழரசு - பாமக - 58,287

2011 சி. கிருஷ்ணன் - அதிமுக - 1,12,102

2016 எஸ். வெற்றிவேல் - அதிமுக - 89,169

2021 ஆா். மணி - அதிமுக - 1,42,455

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments