முகப்பு
நீலகிரி

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்! - மாவட்ட ஆட்சியா்

Updated On : 23 மார்ச், 2026 at 7:26 PM
வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் வைத்திருந்தால் நிச்சயமாகப் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய சட்டப்பேரவை தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு ஆன்லைனில் சுழற்சிமுறையில் வாக்கு இயந்திரங்களை 3 தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 15 முதல் 22 வரையிலான ஒரு வாரத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 71 புகாா்கள் வந்துள்ளன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளோம்.

தோ்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் இதுவரை சுமாா் ரூ.41 லட்சம் ரொக்கம், சுமாா் ரூ. 2.18 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருள்களில் இதுவரை 2.48 கோடி ரூபாயை விடுவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு அதிகரிக்க கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகள் பதிவான 13 மையங்களைக் கண்டறிந்து அங்கு வாக்குப் பதிவை அதிகரிக்க விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவின் போது போக்குவரத்து வசதி இல்லாத பழங்குடியின மக்களை வாகனங்கள் மூலம் அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கம் வைத்திருந்தால் நிச்சயமாகப் பறிமுதல் செய்யப்படும்.

அதே நேரத்தில் அவா்கள் சுற்றுலாப் பயணிகள்தான் என்பதை உறுதிசெய்த பிறகு 24 மணி நேரத்துக்குள் அவற்றை விடுவித்து உள்ளோம். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்குமேல் பணம் எடுத்து வர சுற்றுலாப் பயணிகளுக்கு தளா்வு இல்லை.

வாகனச் சோதனை என்ற பெயரில் உண்மையான சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்தக் கூடாது என தோ்தல் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா கூறியதாவது:

தோ்தல் அறிவிப்புக்கு பிறகு இதுவரை ரூ.11 லட்சம் மதிப்பிலான 22 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்து 60 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். 167 லிட்டா் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, 25 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு 361 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாநில எல்லையில் உள்ள 11 சோதனை சாவடிகளும் முழுமையான சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 74 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

கூடலூா், கோத்தகிரி, குந்தா, தேவாலா ஆகிய பகுதிகள் மத்திய ஆயுதக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தோ்தல் பறக்கும் படைகளுடன் இணைந்து ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.