முகப்பு
திருப்பூர்

உடுமலை அருகே பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்

உடுமலை அருகே காண்டூர் கால்வாய் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

உடுமலை அருகே காண்டூர் கால்வாய் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ÷பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் மூலம் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதன்படி, பாசனப் பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாயின் மூலம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பின்னர் பாசனப் பகுதிகளுக்கு திறந்து விடப்படுகிறது.
 ÷இந்நிலையில், 49.3 கிலோ மீட்டர் நீளமுள்ள காண்டூர் கால்வாய் முற்றிலும் சிதிலம் அடைந்து கிடந்ததால் ஆண்டுதோறும் அதிக அளவில் தண்ணீர் சேதாரம் அடைந்து வருவதாகவும், எனவே அதை புனரமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது ஏற்கப்பட்டு உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 184 கோடியில் 2011-ஆம் ஆண்டு முதல் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
 ÷காண்டூர் கால்வாய் தொடக்க நிலையில் இருந்து அதாவது 0.0 கி.மீ முதல் 11.48 கிலோ மீட்டர் வரை முதல் நிலையாகவும், 11.48 கி.மீ முதல் 30.10 கி.மீ வரை இரண்டாம் நிலையாகவும், 30.10 கி.மீ முதல் 49.30 கி.மீ வரை மூன்றாம் நிலையாகவும் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்தன.
 ÷இரண்டாம் நிலை வரை பணிகள் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்டமாக பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தப் பணிகளுக்காக உடுமலை அருகில் நல்லாறு சுரங்க கால்வாய் தொடங்கி கட்டையன் கரடு, வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதி முதல் 30.10 கி.மீ. -முதல் 49.30 கி.மீ. திருமூர்த்தி அணை வரை அடர்ந்த வனப் பகுதியில் காண்டூர் கால்வாயின் கரையோரம், கரையை சேதப்படுத்தும் விதத்தில் பெரிய அளவில் வளர்ந்திருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன.
 அப்படி வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சீமைக் கருவேலன், வாகை, வேலிக்காத்தான், சவுக்கு, தேக்கு மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சில மீட்டர் தூரத்தில் போடப்பட்டன.
 ÷பொதுப்பணித்துறை மேற்பார்வையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் வனப் பகுதியில் நீண்ட நாள்களாக இந்த மரங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. இந்நிலையில், வனத்துறை அலுவலர்கள் ஒரு சிலர் உதவியுடன் கடந்த சில நாள்களாக இந்த மரங்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் அங்குள்ள செம்மரங்களும் வெட்டப்பட்டு கடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 ÷வனப் பகுதிக்குள், டெம்போக்கள் மூலம் முள்ளம்பட்டி, தேவனூர்புதூர் வழியாக பொள்ளாச்சிக்கும், தளி, பள்ளபாளையம் வழியாக உடுமலைக்கும் இரவு நேரங்களில் இந்த மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 ÷குறிப்பாக ஒரு சில தனியார் டிப்பர் நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய்க்கு இந்த மரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் அளவிற்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 ÷இந்நிலையில், இது குறித்து தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ÷இது குறித்து உடுமலை வனச்சரகர் எம்.தங்கராஜ் பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
 காண்டூர் கால்வாய்ப் பகுதியில் மரங்கள் கடத்துவது தொடர்பாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அது குறித்து துறைரீதியான விசாரணை நடத்தினோம். இந்த சம்பவங்களில் தொடர்புடைய ஒரு வனத்துறை அலுவலருக்கு குற்றப்பத்திரிக்கை கொடுக்க மாவட்ட வனத்துறை அலுவலர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், எத்தனை லட்சம் மதிப்புள்ள மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். பொதுப்பணித் துறையினருக்கு இதில் தொடர்புள்ளதா என எங்களுக்குத் தெரியாது என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →