விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஏப்ரல் 13-இல் சென்னையில் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவலியுறுத்தி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னையில் ஏப்ரல் 13-ஆம் தேதி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவலியுறுத்தி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னையில் ஏப்ரல் 13-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்து தெரிவித்தார்.
உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லடம், கோடங்கிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சின்னகாளிபாளையம் ஈஸ்வரன்,திருப்பூர் பாலசுப்பிரமணியம், வாவிபாளையம் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கே.செல்லமுத்து பேசியதாவது: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், விளை நிலத்தின் வழியாக கெயில் குழாய் பதித்தல் மற்றும் உயர் மின் கோபுரம் நிறுவுதல் ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும். விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.