பல்லடத்தில் "கொசுப் புழு இல்லாத வீடு' : மக்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நகராட்சி நிர்வாகம்
பல்லடம் நகராட்சிப் பகுதியில் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் வீடுகளில்
பல்லடம் நகராட்சிப் பகுதியில் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் வீடுகளில் "ஏடிஎஸ் கொசுப் புழு இல்லாத வீடு' என பாராட்டுத் தெரிவிக்கும் வில்லைகளை நகராட்சி நிர்வாகம் ஒட்டி வருகிறது.
பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் கொசுப் புழு இல்லாத வீடாக வைத்திருக்குமாறு பொது மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஓ. ராஜாராம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், சுகாதார ஆய்வாளர் சங்கர் தலைமையில் சுகாதாரப் பணியாளற்கள் 9ஆவது வார்டு பட்டேல் வீதி, ஏ.ஜே.பி.வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் வீடுகளில் கதவுகளில் "கொசுப் புழு இல்லாத வீடு' என பாராட்டுத் தெரிவிக்கும் வில்லைகளை ஒட்டினர். இது குறித்து சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:
பல்லடம் நகராட்சியில் 15 ஆயிரம் வீடுகள் உள்ளன. வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திப்போரின் வீட்டுக் கதவுகளில் இத்தகைய பாராட்டுத் தெரிவிக்கும் வில்லைகளை ஒட்டி வருகிறோம். சுகாதாரம் இல்லாத வீட்டின் உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம் இல்லாமல் இருப்பது தொடர்ந்து கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.