திருப்பூர்

கோபுரக் கலசம் திருட்டு: சிவன்மலையில் சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மீண்டும் விசாரணை

DIN

காங்கயம் தாலுகா, சிவன்மலை அருகே கோயிலில் உள்ள கலசம் திருடு போன சம்பவம் தொடர்பாக சிவன்மலை கோயில் ஊழியர்களிடம் சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையை அடுத்துள்ள அரசம்பாளைத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட  சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தப் பகுதியின் சங்ககால பெயர் பட்டாலியூர் ஆகும். அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் இங்கு காட்சி கொடுத்ததாகவும், அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் யாரும் பார்க்க முடியாதவாறு ஒரு முகமும் உள்ளது. இந்தக் கோயில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தக் கோயில் கோபுரத்தில் இருந்த பழமையான கோபுரக் கலசம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. இந்தக் கோயிலை புதுப்பிப்பதற்காக பாலாலயம் நடந்து சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழமையான இந்தக் கோயில் கலசம் கொள்ளை போனது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அப்போதே காங்கயம் காவல் துறையில் புகார் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கலசம் திருடப்பட்டு ஓர் ஆண்டு கடந்த பின்னரும் கலசம் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் கடந்த ஆகஸ்ட் 27, 28 ஆகிய 2 நாள்கள் சிவன்மலை முருகன் மலைக் கோயிலில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில், கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோயிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் யுவராஜ் உள்ளிட்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறியபோது, இந்தக் கோயிலில் செயல் அலுவலர்களாக இருந்த பசவராஜன், நந்தகுமார், நாகராஜ், வெற்றிச் செல்வன் உள்ளிட்ட முன்னாள் செயல் அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், கோயில் குருக்கள் என இதுவரை 22 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள மொத்தம் 29 குருக்களில் மாதம் ஒருவர் என முறை வைத்து, கோயில் கலசம் திருட்டுப் போன பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயிலில் ஒருகால பூஜை செய்து வந்துள்ளனர். அவர்களிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறும். திருடுபோன கலசத்தை விரைவில் மீட்போம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT