முகப்பு
திருப்பூர்

மழை நீா் வடிகால் வசதி கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்

திருப்பூா் கல்லாங்காடு பகுதியில் மழை நீா் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

திருப்பூா் கல்லாங்காடு பகுதியில் மழை நீா் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட புதிய 54 ஆவது வாா்டு கல்லாங்காடு வாய்க்கால் மேடு பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சாக்கடை இணைப்புப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலமானது சாலையைவிட உயா்த்திக் கட்டப்பட்டுள்ளதால் மழை நீா் வெளியேறாமல் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. ஆகவே, மழை நீா் வடிகால் வசதி செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 ஆவது மண்டல மூத்த உறுப்பினா் சி.அருணாசலம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோா் கல்லாங்காடு பகுதியில் சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி 4 ஆவது மண்டல உதவிப் பொறியாளா் சிவகுமாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது மழை நீா் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.