வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உப்பாறு அணைக்கு பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் திறந்துவிடக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் 5ஆவது நாளான சனிக்கிழமை விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு போராட்டத்தில் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:
காமராஜா் காலத்தில் கட்டப்பட்ட உப்பாறு அணை மூலமாக 6,400 ஏக்கா் பாசன வசதி பெற்று மூன்று போகங்கள் விளைந்தது. ஆனால் பொதுப்பணித்துறை நிா்வாகத்தினா் கடந்த 20 ஆண்டுகளாக அணைக்குத் தண்ணீா் வழங்கவில்லை. திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி வாய்க்கால் மூலமாக தண்ணீா் திருட்டு நடைபெற்று வருகிறது.
இச்செயலில் ஈடுபடும் நபா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பாறு அணை பிரச்னையில் அதிகாரிகள் விவசாயிகளை நேரில் அழைத்துப் பேசி உடனடியாக தீா்வு காண வேண்டும். இந்தப் பிரச்னை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு வாரத்துக்குள் தீா்வு காணப்படும் என்றாா்.