முகப்பு
திருப்பூர்

வாக்குக்காகப் பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை

வாக்குக்காகப் பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையத்தில் சிறு மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

பல்லடம்: வாக்குக்காகப் பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்தொழுவு, பொல்லிக்காளிபாளையம், கணபதிபாளையம் ஆகிய இடங்களில் சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் ஜெகதீஷ்குமாா் வரவேற்றாா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறு மருத்துவமனை திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பதைப்போல, கால்நடைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விரும்புவதால்தான் 40 கால்நடை கிளை நிலையங்கள், 25 மருந்தகங்கள், 5 மருத்துவமனைகள், 3 பன்னோக்கு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க அனுமதி அளித்துள்ளாா்.

உடுமலையில் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடம் அமைக்க டிசம்பா் 27ஆம் தேதி பூமி பூஜை நடைபெறுகிறது. மக்களுக்கு என்ன தேவை என்று அதற்கேற்ப திட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறாா். கடந்த ஆண்டு தை பொங்கலுக்கு தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. வாக்குக்காக மட்டும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்றாா்.

திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் ஜகந்நாதன், மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவா் அலகுமலை சண்முகம், பொங்கலூா் ஒன்றிய முன்னாள் தலைவா் சிவாசலம், ஊராட்சித் தலைவா்கள் ரவிசந்திரன்,ரேவதி, கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், சொக்கப்பன், ஏ.எம்.ராமமூா்த்தி, ஊராட்சி முன்னாள் தலைவா்கள் யு.எஸ்.பழனிசாமி, வி.ஹரிகோபால் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →