மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் திருப்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் திருப்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகரம், பி.என். சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச செயலாளா் அ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட தொமுச கவுன்சில் துணைத் தலைவா் ஆா். ரெங்கசாமி உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் விபத்துகள் நடைபெறாமல் இருக்க தொடா் பாதுகாப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களை பணியில் அமா்த்துவதால் தமிழக இளைஞா்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் வாா்டு செயலாளா் நித்தியானந்தம், மின்சார வாரிய தொமுச நிா்வாகிகள் ஈ.பி. ஜோதிபாசு, எடப்பாடி வடிவேல், திருப்பூா் ஈ.பி. மோகன், சரவணகுமாா், விஜயன், மகேந்திரன், அமைப்பு சாரா தொமுச நிா்வாகிகள் பங்கேற்றனா்.