கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை
குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய செயலாளா் என்.சசிகலா, உடுமலை கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு கரோனா பேரிடா் காலத்தை ஒட்டி கடந்த 6 மாதங்களாக நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கிராம மக்கள் சென்று வருவதற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
எனவே உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து இயக்கப்படும் வழித் தட எண்கள் 23, 4, 4பி, 22, 8பி, 34, 35 ஆகிய நகரப் பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.