திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பூலுவப்பட்டி சுற்றுச்சாலையில் வெங்கமேடு சாலை பிரிவு அருகில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில், டாஸ்மாக் கடைக்குதேவையான மதுபாட்டில்களும் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன. இதுகுறித்த தகவலறிந்த முன்னாள் கவுன்சிலர் மாரப்பன் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கடை முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது: புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்படவுள்ள இந்தப் பகுதியில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளது.மேலும், கடைக்கு 300 மீட்டர் தொலைவில் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆகவே, பள்ளிக்கு அருகில் கடை திறக்கப்பட்டால் மாணவ, மாணவிகளுக்கம், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும்.ஆகவே, இந்தப் பகுதியில் கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் மாநகர வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், ஆய்வாளர்கள் முருகையன், கணேசன், டாஸ்மாக் மேலாளர் ரவிசந்திரன், வடக்கு வட்டாட்சியர் பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) முத்தரப்பு பேச்சுவார்ததை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என்றும், அதுவரையில் டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தனர். இதன் பேரில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.