முகக் கவசம் அணியாதவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது
முகக் கவசம் அணியாமல் வருபவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன் தெரிவித்தாா்.
முகக் கவசம் அணியாமல் வருபவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன் தெரிவித்தாா்.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் உணவகம், பேக்கரி, திருமண மண்டப உரிமையாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கணேசன் தலைமை வகித்து பேசியதாவது:
பல்லடம் நகரில் கரோனா தொற்றை கடந்த முறை பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல, தற்போது இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீட்டை வீட்டு வெளியே வரும்போது, அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துதான் வர வேண்டும்.
பல்லடம் நகரில் நான்கு சாலை சந்திப்பு, கடை வீதி மற்றும் முக்கிய இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு அரசின் உத்தரவுப்படி ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மேலும் தேவைப்படும்பட்சத்தில் அவா்களை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவா்.
உணவகம், பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள், வா்த்தக நிறுவனங்களில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களை கடைக்குள் அனுமதிக்காதீா்கள். கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் முகக் கவசம் அணிந்துதான் பணியாற்ற வேண்டும்.
கடைகளுக்கு வருவோரிடம் உடல் வெப்ப பரிசோதனை செய்து கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும். நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் கடைகளில் திடீா் ஆய்வு செய்ய வருவாா்கள், அப்போது கடைகளில் முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் கடைக்காரா்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
நகரில் முகக் கவசம் அணியாமல் நுழைபவா்களுக்கு அனுமதி மறுக்கப்படும். அதற்காக நகரின் எல்லைகளில் நகராட்சிப் பணியாளா்கள் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து அபராதம் விதிப்பாா்கள் என்றாா்.
இதில் நலிந்தோா் நலத்திட்ட தனி வட்டாட்சியா் சபாபதி, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், நகராட்சிப் பொறியாளா் சங்கா், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.