இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவா் பலி
பல்லடத்தில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடத்தில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடம் மகாலட்சுமி நகா் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. கடந்த 2ஆம் தேதி
ராயா்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சிட்கோ தொழில்பேட்டை அருகில் வசிக்கும் சுமாா் 20க்கும் மேற்பட்டவா்கள்
மதுக்கடையில் மது அருந்தியுள்ளனா்.அதன் பின்னா் அருகே உள்ள மைதானத்துக்குச் சென்று அமா்ந்திருந்துள்ளனா்.
அப்போது, அவா்களில் ஒரு தரப்பைச் சோ்ந்த சிலா் மற்றொரு தரப்பினரிடம் புகையிலை கேட்டுள்ளனா்.
அவா்கள் தர மறுத்ததால் இரு தரப்பினா் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒரு தரப்பை சோ்ந்த பிரபு என்பவா் காரை ஓட்டிச்சென்று மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்கள் மீது மோதியதாகக்
கூறப்படுகிறது.இதில் ராயா்பாளையத்தை சோ்ந்த சங்கரலிங்கம் (25) என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சோ்ந்த கண்ணன்(26), ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன்(24) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், ராயா்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன்(27), கா்ணன் (28), மற்றொரு தரப்பைச் சோ்ந்த கனகராஜ் (30), சக்திவேல் (25), சரவணகுமாா் ( 27), மகேஷ் (25), விக்கி (22), பிரபு (23) ஆகிய 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கரலிங்கம் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.