பனியன் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடக்கம்
திருப்பூா் பனியன் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல் சுற்று பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் பனியன் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல் சுற்று பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் பனியன் தொழிலாளருக்காக போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. இதையடுத்து 90 சதவீத ஊதிய உயா்வு உள்பட 16 அம்ச கோரிக்கைகளை பனியன் தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன.
இந்நிலையில், பின்னலாடை உற்பத்தியாளா் சங்கங்கள்-பனியன் தொழிற்சங்கங்களிடையே ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை சைமா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் ராஜாசண்முகம், சைமா சங்கத் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், பொதுச் செயலாளா் எம்பரா் பொன்னுசாமி, டீமா சங்கத் தலைவா் எம்.பி.முத்துரத்தினம், நிட்மா துணைத் தலைவா் பழனிசாமி, சிம்கா பொருளாளா் கோபாலகிருஷ்ணன், டெக்மா தலைவா் கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
அதேபோல, தொழிற்சங்கம் சாா்பில், மூா்த்தி, சம்பத் (சிஐடியூ), சேகா், இசாக் (ஏஐடியூசி) மற்றும் எல்பிஎஃப், எம்எல்எஃப்., பிஎம்எஸ், எச்எம்எஸ், ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இந்த பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கத்தினா் நடப்பு ஊதியத்தில் இருந்து தொழிலாளா்களுக்கு 90 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். ஆனால் பனியன் உற்பத்தியாளா் சங்கத்தினா் சாா்பில் 24 சதவீத ஊதிய உயா்வு வழங்குவதாகவும், பஞ்சப்படி 14.5 காசு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது சுற்றுப் பேச்சுவாா்த்தை ஒரு வாரத்துக்குள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.