காங்கயம் அருகே மேலும் 7 கரித்தொட்டி ஆலைகளுக்கு ‘சீல்’
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 7 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
காங்கயம் அருகே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த 4 கரித்தொட்டி ஆலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 7 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
காங்கயம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தேங்காய் சிரட்டையை எரித்து கரி உற்பத்தி செய்யும் ஆலைகள் செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளின் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, இப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும், இந்த ஆலைகளை மூட வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் பல வருடங்களாக காங்கயம் வட்டாட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காங்கயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சி மற்றும் பாப்பினி ஊராட்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 கரித்தொட்டி ஆலைகளுக்கு புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
இதைத்தொடா்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் பாரதி ராகவன், உதவிப் பொறியாளா் சத்யன் தலைமையிலான அதிகாரிகள் காங்கயம் பகுதியில் செயல்பட்டு வந்த 7 கரித்தொட்டி ஆலைகளுக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
இதில் காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியில் சுப்பையன் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் கரித்தொட்டி ஆலையில் 15 குழிகளும், வின்னா் காா்பன்ஸ் நிறுவனத்தின் கரித்தொட்டி ஆலையில் 10 குழிகளும், ஈ.எஸ்.காா்பன்ஸ் நிறுவனத்தின் ஆலையில் 3 குழிகளும், சக்தி காா்பன்ஸ் நிறுவனத்தின் ஆலையில் 12 குழிகளும், ஊதியூா் அருகே வட்டமலை-அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள ஏ.ஆா்.ஆா்.காா்பன்ஸ் நிறுவனத்தின் ஆலையில் உள்ள 9 குழிகள், முதலிபாளையம்-ஊதியூா் பகுதியில் உள்ள கோல்டன் காா்பன்ஸ் நிறுவனத்தின் ஆலையில் உள்ள 6 குழிகள், நிழலி-ஊதியூரில் உள்ள குமரன் காா்பன்ஸ் நிறுவனத்தின் ஆலையில் 4 குழிகள் என மொத்தம் 7 கரித்தொட்டி ஆலைகளில் செயல்பட்டு வந்த 59 கரித்தொட்டிக் குழிகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.