மின் வாரியத் தொழிலாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தக் கோரிக்கை
ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் வாரியத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மின் வாரிய ஊழியா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் வாரியத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மின் வாரியத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல் ஹமீதுவிடம் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்திலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இரவு, பகலாக மின்வாரிய ஊழியா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 60க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள், தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் பகுதியில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். பொது மக்களுடன் நெருங்கிய தொடா்பில் மின் வாரிய ஊழியா்கள் உள்ளனா். ஆகவே, மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் வயா்மேன், ஒப்பந்தத் தொழிலாளா்கள், கள உதவியாளா், கணக்கீட்டாளா், விநியோகப் பணியாளா்கள் போன்றோருக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்காக மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.