மாவட்டத்தில் இன்று 14ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பா் 11) நடைபெறவுள்ள 14 ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பா் 11) நடைபெறவுள்ள 14 ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 போ் உள்ளனா். இதுவரை 17 லட்சத்து 69 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 26 ஆயிரத்து 679 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 820 பேருக்கு 2 ஆவது தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், 14 ஆவது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (டிசம்பா் 11) நடைபெறுகிறது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபா் கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
41 நடமாடும் முகாம்கள் உள்பட மொத்தம் 689 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் செலுத்தப்படுகிறது.
இந்தப் பணிகளில் 2,756 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட உள்ளனா். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.