காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்: 3 போ் பலி
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 4 போ் படுகாயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 4 போ் படுகாயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், இரும்பாலை-கங்கை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் மகன் அறிவழகன் (25). அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் செந்தில்குமாா் (24), வடிவேல் மகன்கள் பிரபு (23), சபரிராஜா (25), ஜெகன் (24), கல்லூரி மாணவா் கோகுல்கிருஷ்ணன் (18), கந்தசாமி (24) ஆகிய 7 பேரும் பழனி கோயிலுக்கு வேன் மூலம் சென்றுள்ளனா்.
அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு பழனியில் இருந்து தாராபுரம் வழியாக சேலத்துக்கு சென்றுகொண்டிருந்தனா். காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் தனியாா் அரிசி ஆலை அருகே புதன்கிழமை இரவு 12 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியது. இதில் வேனில் இருந்த செந்தில்குமாா், வேனை ஓட்டி வந்த அறிவழகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த பிரபு, ஜெகன், கோகுல்கிருஷ்ணன், கந்தசாமி, சபரிராஜா ஆகிய 5 பேரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் அவா்களது சொந்த விருப்பத்தின்பேரில் 5 பேரும் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு சென்றுள்ளனா். செல்லும் வழியிலேயே பிரபு உயிரிழந்தாா்.
ஜெகன், கோகுல்கிருஷ்ணன், கந்தசாமி, சபரிராஜா ஆகிய 4 பேரும் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தில் வேன் முற்றிலும் சேதமடைந்தது. அரசுப் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது.