நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
சிஐடியூ சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே, மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சிஐடியூ சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ சங்க மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், தலைவா் பி.பழனிசாமி, சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா் ஜி.சம்பத் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் 1,500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களில் பெரும்பாலானவா்களுக்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஆகவே, தூய்மைப் பணியாளா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றனா்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிா்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், அனைத்து மண்டலங்களிலும் நிலுவை ஊதியம் உள்ள தொழிலாளா்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வியாழக்கிழமை வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா்.