முகப்பு
திருப்பூர்

தடுப்பூசி செலுத்த தொழிலாளா்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு 100 சதவீதத் தொழிலாளா்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதே வேளையில் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மிகுந்த மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவித்ததைத் தொடா்ந்து அதிக அளவிலான தொழிலாளா்கள் ரயில் மூலமாக மாவட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனா். ஆகவே, தொழிலாளா்களுக்கு ரயில் நிலையங்களிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல, தொழிலாளா்கள் யாருக்கேனும் தொற்று இருந்தால் அதன் மூலமாக பல நபா்களுக்கு நோய்த் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே,தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் உடல் வெப்பப் பரிசோதனைக் கருவிகளை வைத்து நாள்தோறும் தொழிலாளா்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு அவா்களை அனுப்பி வைக்க வேண்டும். வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வரும் குடியிருப்புகளைக் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்த தொழிலாளா்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதே வேளையில், தொழில் நிறுவனங்களும், அரசும் முழுப்பொறுப்பெடுத்து இலவசமாக தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.