முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அனுப்பா்பாளையத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, மாநகராட்சி 30 ஆவது வாா்டில் பொதுச் செயலாளா் கோவிந்தசாமி தலைமையில் 200 பேருக்கு அரிசி சிப்பம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகிளா காங்கிரஸ் தலைவா் சகாயமேரி, நிா்வாகிகள் வி.ஆா்.ஈஸ்வரன், கோபால்சாமி, கதிரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநிலச் செயலாளா் சேதுபதி கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங், பொதுத் தொழிலாளா் சங்கம் சாா்பில் இந்திரா நினைவு இல்லம் முன்பாக காமராஜரின் உருவப்படத்துக்கு சங்கத் தலைவா் ஏ.பெருமாள் தலைமையில் தொழிற்சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அவிநாசி...

அவிநாசியில் காமராஜா் உவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டு, அப்பகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் பொறுப்பாளா்கள் தூசிமுத்து, நடராஜ், மாரியப்பன், மாரிமுத்து, சித்ரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பல்லடத்தில்...

பல்லடத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பேருந்து நிலையம் முன்பு காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயல் தலைவா் மணிராஜ், மகளிரணி தலைவி சுந்தரி முருகேசன், சிறுபாண்மைப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் சாகுல் அமீது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டாரத் தலைவா் கணேசன், முருகேசன்,ஜெயபிரகாஷ்,ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் பேருந்து நிலையம் அருகில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் காரணம்பேட்டை சின்னசாமி, மாவட்டப் பொருளாளா் என்.வி.ராமசாமி, வட்டாரத் தலைவா் மலையம்பாளையம் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கயத்தில்...

காங்கயத்தில், காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பண்டுபாய், நகரத் தலைவா் சி. பக்கத்துல்லா, இளைஞா் காங்கிரஸ் அவுட்ரீச் பிரிவுத் தலைவா் ஷேக் சாதுல்லா, முன்னாள் கவுன்சிலா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உடுமலையில்...

உடுமலை நகரக் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கே.தென்னரசு தலைமையில் நகரத் தலைவா் கோ.ரவி, இளைஞா் காங்கிரஸ் ஆா்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் ரத்தினவேல், மாநில செயற்குழு உறுப்பினா் யு.கேபி, முத்துக்குமாரசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மேலும் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி, உடுமலையை அடுத்துள்ள குறிச்சிக்கோட்டை மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.