கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூா் மாநகரில் கஞ்சா விற்பனை செய்த நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகரில் கஞ்சா விற்பனை செய்த நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
இது குறித்து, திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ஜூன் 1 ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த நபரிடம் நடத்திய சோதனையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கோல்டன் நகா் 2 ஆவது வீதியைச் சோ்ந்த கே.அறிவுச்செல்வன் (43) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவையில் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இளைஞா்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையிலும் அறிவுச்செல்வன் செயல்பட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறிவுச்செல்வனிடம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.