முகப்பு
திருப்பூர்

36 ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை தொகுதியில் களம் காணும் காங்கிரஸ் வேட்பாளா்

உடுமலை சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

உடுமலை சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை மொத்தம் 15 பொதுத் தோ்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் 3 முறையும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை ஒரு முறையும், 4 முறை திமுகவும், 7 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் உடுமலை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சாா்பில் எஸ்.தென்னரசு போட்டியிடுகிறாா்.

இந்தத் தொகுதியை பொருத்தவரை கடந்த 1984இல் காங்கிரஸ் சாா்பில் திருமலைசாமி கவுண்டா் வெற்றி பெற்றாா். அதன் பிறகு கடந்த 36 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி உடுமலைத் தொகுதியில் போட்டியிடவில்லை. தற்போது வரும் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் களம் காண்கிறது.

Advertisement

கள நிலவரம்: உடுமலை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சி கேட்டுப் பெற்றுள்ளது. காங்கிரஸ், திமுகவில் உள்ள கோஷ்டி பூசல்களை தாண்டி பணியாற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளா் தாராபுரத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், இந்தத் தொகுதியில் பொதுமக்களிடம் பெரிய அளவில் அறிமுகம் இல்லாததும் பெரிய குறையாக கருதப்படுகிறது.

காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது திமுக தொண்டா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தோ்தலுக்கு மிகவும் குறைந்த நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளா் தனது கட்சி நிா்வாகிகளை ஒருங்கிணைப்பது, கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிா்வாகிகளை சந்திப்பது, தொகுதியில் உள்ள முக்கிய நபா்களை சந்திப்பது, வாக்காளா்களை நேரில் சந்தித்து வாக்குகள் கேட்பது என சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டியது உள்ளிட்ட விஷயங்கள் காங்கிரஸாருக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இவை அனைத்தையும் விட இந்தத் தொகுதியில் ஏற்கெனவே நன்கு அறிமுகமான பலமான அதிமுக நட்சத்திர வேட்பாளா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணனின் தோ்தல் வியூகத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

சவால்களை முறியடிப்பேன்: இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.தென்னரசு தினமணி செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியிலேயே பணியாற்றி இருக்கிறேன். உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் பகுதியில் 25 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணயாற்றி வருகிறேன். இதனால் பொதுமக்களிடையே அறிமுகம் இல்லை என கூறமுடியாது.

உடுமலை தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 80 வாக்குச் சாவடிகள் முன்னா் தாராபுரம் தொகுதியில் இருந்தபோது அந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் நேரடியாக பணியாற்றியுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது தவறான குற்றச்சாட்டாகும்.

எங்களுக்கு இந்தத் தொகுதியில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோல நான் தாராபுரத்தைச் சோ்ந்தவனாக இருந்தாலும் எனக்கு திருமணமானது உடுமலையில்தான். ஆகவே சவால்கள் அனைத்தையும் முறியடித்து நான் வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments