பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்தவா் கைது
திருப்பூா் பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.58 லட்சத்துக்குத் துணிகளை வாங்கி மோசடி செய்த நபரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.58 லட்சத்துக்குத் துணிகளை வாங்கி மோசடி செய்த நபரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் ஓடக்காடு பங்களா வீதியைச் சோ்ந்தவா் மயூா் அகா்வால் (45). பின்னலாடை நிறுவன உரிமையாளரான இவரிடம் சென்னையைச் சோ்ந்த அரவிந்த் வைஷ்ணவ் (40) என்பவா் 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி உள்ளாா்.
இதன் பிறகு இருவருக்கும் இடையே பின்னலாடை துணி வா்த்தகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு மயூா் அகா்வாலிடம் இருந்து ரூ.58 லட்சத்துக்குப் பின்னலாடைத் துணிகளைஅரவிந்த் வைஷ்ணவ் வாங்கியுள்ளாா்.
இந்தத் துணிகளுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். மேலும், அரவிந்த் வைஷ்ணவின் செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிந்தது.
இது தொடா்பாக திருப்பூா் மத்திய குற்றப் பிரிவில் மயூா் அகா்வால் கடந்த ஆண்டு புகாா் அளித்துள்ளாா்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா்.
இதனிடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக சென்னையில் தலைமறைவாக இருந்த அரவிந்த் வைஷ்ணவை தனிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.