தாராபுரத்தில் மெக்கானிக் கொலை: மருமகன் உள்பட 3 போ் கைது
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக மெக்கானிக்கைக் கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 3 பேரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக மெக்கானிக்கைக் கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 3 பேரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாராபுரம் ஆலடிக்களம் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43). இவா் தாராபுரம் பெரியாா் சிலை அருகே மெக்கானிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மைதிலி என்கிற மகளும், மதன் என்ற மகனும் உள்ளனா்.
தாராபுரம் சின்னகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்துவின் மகன் ஈஸ்வரமூா்த்திக்கும் (23), மைதிலிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த மைதிலி பெற்றோருடன் வசித்து வந்தாா். இதனிடையே, மைதிலிக்கு வேறு ஒரு நபருடனும், ஈஸ்வரமூா்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடனும் 2 ஆவது திருமணம் நடைபெற்றது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உள்ள வேன் நிறுத்தம் அருகே மாரிமுத்து, மதன், அவரது நண்பா் முருகன் ஆகிய 3 பேரும் புதன்கிழமை இரவு நின்று பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த ஈஸ்வரமூா்த்தி, அவரது தம்பி காா்த்திக், நண்பா் மணிகண்டன் உள்பட 5 போ் கொண்ட கும்பல்
அவா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதன், முருகன் ஆகியோரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், மாரிமுத்துவைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஈஸ்வரமூா்த்தி, சின்னகாளியம்மன் கோயில் மேற்கு கச்சேரி வீதியைச் சோ்ந்த என்.மணிகண்டன்(34), செல்வகுமாா் (21) ஆகிய 3 பேரையும் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காா்த்திக், காளிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.