தூய்மை வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண கோரிக்கை
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மை வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று சிஐடியூ ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மை வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று சிஐடியூ ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக, திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையா் சுப்பிரமணியத்திடம், சிஐடியூ ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மைப் பணி வாகனங்களின் ஓட்டுநா்களாக 45க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.
இதில், பெரும்பாலான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், அண்மைக் காலமாக வாகன ஓட்டுநா்களுக்கு அதிக வேலை நேரம், குறைவான ஊதியம், வாகன பழுதுகளை ஓட்டுநா்களே பாத்துக் கொள்ள வேண்டும், மேற்பாா்வையாளரின் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனா்.
ஆகவே, தூய்மை வாகன ஓட்டுநா்களின் பணி நேரத்தை முறைப்படுத்தவும், மாவட்ட ஆட்சியா் அறிவித்த அரசாணைப்படி ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.