தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் குவிந்த பக்தா்கள்
தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, திருப்பூா் கோட்டை மாரியம்மன், விஸ்வேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, திருப்பூா் கோட்டை மாரியம்மன், விஸ்வேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் பக்தா்களின் வருகை குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில், திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கோயிலில் அதிகாலை 5 மணி முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல, திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில், திருப்பூா் புகா் பகுதிகளில் உள்ள அலகுமலை முத்துகுமார சுவாமி கோயில், ஊத்துக்குளி அருகே உள்ள கதித்தமலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திராளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.
காங்கயத்தில்...
காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுபகிருது வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.
இதையடுத்து, சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் காங்கயம், திருப்பூா், படியூா், குண்டடம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, காங்கயத்தை அடுத்துள்ள காடையூா் காடையீஸ்வர சுவாமி கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், அகிலாண்டபுரம் அகஸ்த்தீஸ்வரா் மற்றும் அகிலாண்டீஸ்வரி
கோயில், பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில், ஊதியூா் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில், நத்தக்காடையூா் ஜெயங்கொண்டேஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலையில்...
உடுமலை குட்டை திடலில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி புத்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, உடுமலை திருப்பதி திருக்கோயில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், போடிபட்டி முருகன் கோயில், காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.