திருப்பூர்

நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஜனவரி 17,18இல் உற்பத்தி நிறுத்தம்

DIN

நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வரும் ஜனவரி 17, 18 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதன்மூலமாக 2 நாள்களில் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது  கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்ந்தது. இந்த நூல் விலை உயர்வுக்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, திருப்பூரில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு மனுக்களை அனுப்பியும், போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி கிலோவுக்கு ரூ.10 குறைந்திருந்தது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நூல் விலையானது மீண்டும் கிலோவுக்கு ரூ.30 வரையில் உயர்ந்துள்ளது திருப்பூர் தொழில் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜனவரி 17,18இல் உற்பத்தி நிறுத்தம்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த ஜனவரி1 ஆம் தேதி மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. நூற்பாலை உரிமையாளர்கள் பஞ்சு விலையைக் காரணம் காட்டி நூல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு 11 சதவீத வரி விதித்துள்ளதை காரணம் காட்டியே பஞ்சு, நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனால் தொழில் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னலாடைத் துறையே கேள்விக்குறியாகியுள்ளது. இந்தத் தொழில் வீழ்ச்ச்சியடைந்தால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே,பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.

நம்மிடம் இருந்து கொள்முதல் செய்யும் சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் தான் பின்னலாடை ஏற்றுமதியில் நேரடி போட்டியாளர்களாகும். அந்த நாடுகள் நம்மிடம் மூலப்பொருளான பஞ்சை வாங்கி அவர்களது பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திச் செல்கின்றனர்.

ஆகவே, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், அதனைச்சார்ந்த நிட்டிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ரைசிங், ஸ்டிச்சிங் உள்ளிட்ட சுமார் 20ஆயிரம் நிறுவனங்கள் வரும் ஜனவரி 17, 18 ஆம் தேதிகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி என இரு நாள்களில் சுமார் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படும். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த சந்திப்பின்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி, பொருளாளர் மோகன், இணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT